டி20 கிரிக்கெட்டில் 5-வது இடத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமான வேலையாகும் - சஞ்சு சாம்சன்
|ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 71 ரன்னும், துருவ் ஜூரெல் 52 ரன்னும் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தனர்.
லக்னோ,
ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 196 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 76 ரன், தீபக் ஹூடா 50 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 71 ரன்னும், துருவ் ஜூரெல் 52 ரன்னும் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தனர்.
அபாரமாக ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த பிட்ச்சில் புதிய பந்தில் கொஞ்சம் சவால் இருந்தது. ஆனால் அது பழையதானதும் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருந்தது. அதை தெளிவாக பார்க்க நான் விக்கெட் கீப்பராக இருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.
எங்களுடைய பவுலர்கள் அணியாக சேர்ந்து முக்கிய ஓவர்களை வீசினார்கள். களத்திற்கு வெளியே நாங்கள் நிறைய திட்டங்களை வகுத்துள்ளதால் எங்களுடைய பவுலர்களுக்கு ஒவ்வொரு பந்திலும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அதனால் ஆரம்பம் முதல் கடைசி வரை நன்றாக செயல்பட்டு அவர்கள் போட்டியை எங்கள் பக்கம் எடுத்து வருகின்றனர்.
துருவ் ஜூரெல் பார்ம் தற்காலிகமானது. டி20 கிரிக்கெட்டில் 5-வது இடத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமான வேலையாகும். அவரைப் போன்ற இளம் வீரரிடம் பொறுமை இருப்பதை டெஸ்ட் தொடரில் நாங்கள் பார்த்தோம். எனவே அவரை நாங்கள் நம்புகிறோம். நன்றாக செயல்படும் எங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்கிறது.
நாங்கள் இதே செயல்முறையை கடைப்பிடிக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் தவறுகள் நடக்கலாம். எனவே எங்களுடைய செயல் முறையில் நாங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். வெற்றிகள் எங்கள் பக்கம் வருவதிலிருந்தே நாங்கள் சரியான வேலையை செய்கிறோம் என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.