< Back
கிரிக்கெட்
தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமல்ல... அவர்களும் முக்கிய காரணம் - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
கிரிக்கெட்

தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமல்ல... அவர்களும் முக்கிய காரணம் - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

தினத்தந்தி
|
9 Aug 2024 10:22 AM IST

இலங்கை பவுலர்கள் இந்தியாவை 3 போட்டிகளிலும் ஆல் அவுட் செய்ததாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மும்பை,

இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 0 (3 போட்டிகள்) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் கடந்த 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் தோல்வியை சந்திக்காமல் வந்த இந்தியாவின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. இந்த தோல்விக்கு இந்தியாவின் பேட்ஸ்மேன்கள்தான் மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள்.

ஏனெனில் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கை ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாத அவர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் முதல் போட்டியில் 231 ரன்களை தொட முடியாமல் சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 241 ரன்களை அடிக்க முடியாமல் தோற்றது. அதை விட 3வது போட்டியில் 249 ரன்களை துரத்திய இந்தியா 110 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.

அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா என்ற விமர்சனங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் இத்தொடரில் இலங்கை பவுலர்கள் இந்தியாவை 3 போட்டிகளிலும் ஆல் அவுட் செய்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆனால் இந்திய பவுலர்கள் ஒருமுறை கூட இலங்கையை ஆல் அவுட்டாக்கவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார். எனவே பவுலர்களும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானதாக தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"நம்மால் பந்து வீச்சில் நன்றாக துவங்கியும் எதிரணியின் இன்னிங்ஸை முடிக்க முடியவில்லை. அத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் 160, 170 ரன்களுக்குள் இலங்கையை சுருட்ட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இலங்கை 230, 240, 248 ரன்கள் அடித்தார்கள். உங்களால் 3 போட்டியில் விளையாடியும் ஒருமுறை கூட 10 விக்கெட்டை எடுக்க முடியவில்லை. இது போன்ற பிட்ச்களில் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் 5 விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்.

ஆனால் அதுவும் நடக்கவில்லை. அதில் நம்மால் விக்கெட்டுகளை எடுக்க முடியாவிட்டாலும் சேசிங் செய்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது தெரிந்தது. ஆனால் இந்திய பவுலர்களிடம் ஆக்ரோஷம் காணவில்லை. பிளாட்டான பிட்ச்களில் நாம் நன்றாக பேட்டிங் செய்கிறோம் பவுலர்களும் அசத்துகின்றனர். ஆனால் பிட்ச் கொஞ்சம் சுழன்றால் நமது பேட்டிங், பவுலிங் சுமாராக தெரிகிறது. இதை நாம் சரி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்