< Back
கிரிக்கெட்
வனிந்து ஹசரங்கா 2 டெஸ்ட் போட்டிகளில்  விளையாட தடை.. காரணம் என்ன?

image courtesy: ICC

கிரிக்கெட்

வனிந்து ஹசரங்கா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை.. காரணம் என்ன?

தினத்தந்தி
|
20 March 2024 8:22 AM IST

இலங்கை வீரர் ஹசரங்காவுக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்காளதேசம் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இலங்கை அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் கடந்த வருடம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஹசரங்கா இடம்பெற்றிருந்தார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் தற்போது கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க டெஸ்ட் ஓய்வில் இருந்து விடுபட்டு மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே, நேற்றிரவு ஹசரங்காவுக்கு 2 டெஸ்டில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அதிரடியாக தடைவிதித்துள்ளது. சமீபத்தில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியின்போது நடுவரிடம், தான் கொடுத்து வைத்திருந்த தொப்பியை பிடுங்கியதுடன், அவரை கேலியும் செய்தார். இது வீரர்களின் நடத்தை விதியை மீறிய செயலாகும்.

இதையடுத்து அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டன. ஏற்கனவே 5 தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றிருந்த ஹசரங்காவுக்கு அந்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. 8 தகுதி இழப்பு புள்ளி என்பது 4 இடைநீக்க புள்ளியாக எடுத்துக் கொள்ளப்படும்.

4 இடைநீக்க புள்ளி என்பது 2 டெஸ்ட் அல்லது 4 ஒரு நாள் அல்லது நான்கு 20 ஓவர் போட்டிக்கு தடை விதிப்பதற்கு சமமானது. அவருக்கு எந்த போட்டி முதலில் வருகிறதோ அதற்கு தடை விதிக்கப்படும். அந்த வகையில் முதலில் வங்காளதேசத்துக்கான இரு டெஸ்ட் நடக்க இருப்பதால் அவர் அதில் விளையாட முடியாது. இதனால் ஹசரங்கா ஐ.பி.எல்.-ல் முதல் ஆட்டத்தில் இருந்தே விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்