வங்காளதேசம்- நியூசிலாந்து டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டம் மழையால் முழுவதும் பாதிப்பு
|முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
டாக்கா,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 150 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியினர் நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
வெறும் 66.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம்35 ரன்களும், ஷஹாதத் ஹொசைன் 31 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிலிப்ஸ் மற்றும் சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி வங்காளதேச வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. டேரில் மிட்செல் 12 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 5 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்க இருந்தது. இந்நிலையில் ஆட்டம் தொடங்கும்போது அங்கு மழை பெய்ததால் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.
தொடர்ந்து மழை பெய்து வந்ததால் 2-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.