பற்றி எரியும் வங்காளதேசம்: இந்தியாவில் நடக்கிறதா மகளிர் டி20 உலக கோப்பை..?
|வங்காளதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் டி20 உலக கோப்பை வேறு நாட்டுக்கு மாற்றப்படுகிறதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார். ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதும், ஆட்சியை வங்காளதேச ராணுவம் கையில் எடுத்துக்கொண்டது. அதன்படி நாடு முழுவதும் இயல்பு நிலையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதை ராணுவ தளபதி வகார்-உஸ்-ஜமான் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
இதனிடையே வங்காளதேச தேசிய கட்சி செயலாளர் மிர்சா பக்ருல் இஸ்லாம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், நாட்டின் சட்டம்-ஒழுங்குக்கான பொறுப்பை ராணுவம் ஏற்கும் என தெரிவித்தார்.
இதனிடையே மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. இதன்படி மகளிர் உலக கோப்பைத் தொடர் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கி அக்டோபர் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் வங்காளதேசத்தில் உள்நாட்டு கலவரம் நிலவி வரும் நிலையில், அக்டோபரில் அங்கு திட்டமிட்டபடி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வங்காளதேசத்தில் வன்முறை குறைந்து இயல்பு நிலை திரும்பினால், அங்கு டி20 உலக கோப்பை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரை வேறு நாட்டுக்கு மாற்றப்படும் தேவை ஏற்பட்டால் இந்தியா முதன்மையான தேர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வங்காளதேச சூழலை ஐ.சி.சி. உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இதுகுறித்து ஓரிரு வாரங்களில் முடிவெடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.