< Back
கிரிக்கெட்
பால்பிர்னி அதிரடி அரைசதம்...பாகிஸ்தானை வீழ்த்தி அயர்லாந்து திரில் வெற்றி

image courtesy: twitter/@ICC

கிரிக்கெட்

பால்பிர்னி அதிரடி அரைசதம்...பாகிஸ்தானை வீழ்த்தி அயர்லாந்து திரில் வெற்றி

தினத்தந்தி
|
10 May 2024 6:11 PM GMT

அயர்லாந்து - பாகிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

டப்ளின்,

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

அதன்படி அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று டப்ளின் நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமின் அரை சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 57 ரன்கள் அடித்தார். அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக கிரேக் யங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பால்பிர்னி அருமையாக விளையாடி ரன்களை சேர்த்தார். பாகிஸ்தான் பந்து வீச்சை திறம்பட சமாளித்த அவர் 77 ரன்கள் குவித்தார். அவரை தொடர்ந்து இறுதி கட்டத்தில் டாக்ரெல் அதிரடியாக விளையாடினார்.

இருப்பினும் அயர்லாந்து வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அந்த ஓவரை அப்பாஸ் அப்ரிடி வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட கர்டிஸ் கேம்பர் 5 பந்துகளிலேயே 11 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். முடிவில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து திரில் வெற்றி பெற்றது. அயர்லாந்து வீரர் பால்பிர்னி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

மேலும் செய்திகள்