< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பேர்ஸ்டோ தவறவிட வாய்ப்பு
கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பேர்ஸ்டோ தவறவிட வாய்ப்பு

தினத்தந்தி
|
24 March 2023 4:03 AM IST

பேர்ஸ்டோவுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்து விட்டது.

புதுடெல்லி,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. அன்று இரவு 7.30 மணிக்கு ஆமதாபாத்தில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. ஏப்ரல் 1-ந் தேதி மாலை 3.30 மணிக்கு மொகாலியில் நடைபெறும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை சந்திக்கிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ஜானி பேர்ஸ்டோ இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரை முழுமையாக தவறவிடுகிறார். 33 வயதான பேர்ஸ்டோ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து தற்போது உடல் தகுதியை எட்டி இருந்தாலும், அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்து விட்டது.

இதனால் அவர் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேர்ஸ்டோவை பஞ்சாப் அணி நிர்வாகம் ரூ.6¾ கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. பேர்ஸ்டோ ஆட முடியாதது பஞ்சாப் அணிக்கு பெரிய இழப்பாகும்.

அதேநேரத்தில் காயத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கும் இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர்கள் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கி இருக்கிறது. சாம் கர்ரனை ரூ.18½ கோடிக்கும், லிவிங்ஸ்டனை ரூ.11½ கோடிக்கும் பஞ்சாப் அணி வாங்கி இருந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்