பதோனி, பூரன் அதிரடி ஆட்டம்...லக்னோ 165 ரன்கள் சேர்ப்பு
|லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ரன்கள் எடுத்தார்.
ஐதராபாத்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 57வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து லக்னோவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் டி காக் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டி காக் 2 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஸ்டோய்னிஸ் 3 ரன்னிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் 29 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதனால் லக்னோ அணி 10 ஓவர்களில் 57 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து க்ருணால் பாண்ட்யா மற்றும் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தனர். இதில் பாண்ட்யா 24 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஆயுஷ் பதோனி களம் இறங்கினார்.
பூரன் - பதோனி இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இதில் பதோனி 28 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.
லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி ஆட உள்ளது.