பாபர் - ரிஸ்வான் அரைசதம்; அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
|பாகிஸ்தான் தரப்பில் பாபர் அசாம் (75 ரன்), முகமது ரிஸ்வான் (56 ரன்) அரைசதம் அடித்து அசத்தினர்.
டப்ளின்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடியது. இதில் முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் லோர்கன் டக்கர் 73 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீப் அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 17 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 181 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் பாபர் அசாம் (75 ரன்), முகமது ரிஸ்வான் (56 ரன்) அரைசதம் அடித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.