பாபர் ஆசம் கேப்டன் பொறுப்பை கைவிட வேண்டும் - சோயப் மாலிக்
|பாபர் ஆசம் கேப்டன் பொறுப்பை கைவிட வேண்டும் என சோயப் மாலிக் கூறியுள்ளார்.
கராச்சி,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நல்ல நிலையில் இருந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இலக்கை விரட்டிய இந்திய அணி 30.3 ஓவர்களிலேயே 192 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்ததாக பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரரான சோயப் மாலிக், பாபர் ஆசம் கேப்டனாக இருக்கக் கூடாது என்று நேரடியாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
நான் ஏற்கனவே கூறியது போன்றதுதான் இப்போதும் கூறுகிறேன். பாபர் ஆசம் கேப்டன் பொறுப்பை கைவிட வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஏனெனில் பாபர் ஆசம் கேப்டனாக பெரிய அளவில் வெளியில் சென்று சோபிக்க முடியவில்லை.
அவர் ஒரு பேட்ஸ்மனாக பாகிஸ்தான் அணிக்கு பெரிய பங்களிப்பை வழங்க முடியும். எனவே அவர் தற்போது கேப்டன் பதவியிலிருந்து வெளியேறுவது அணிக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்