ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதம்...விராட் கோலியின் சாதனையை இந்த பாகிஸ்தான் வீரர் முறியடிப்பார் - கம்ரன் அக்மல் கணிப்பு
|ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (50) முதல் இடத்தில் உள்ளார்.
கராச்சி,
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்று கிழமை (19-11-2023) அன்று உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை 700க்கும் அதிகமான ரன்களை குவித்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார் விராட் கோலி. இவர் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் அபாரமாக ஆடி சதமடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் சாதனையை முறியடித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் 49 சதங்களும், விராட் கோலி 50 சதங்களும் (தற்போது வரை) அடித்துள்ளனர். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 50 சதங்கள் சாதனையை இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் முறியடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக கம்ரன் அக்மல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
" டாப் 3 பேட்ஸ்மேன்கள் மட்டுமே 50 சதங்கள் சாதனையை உடைக்க முடியும். மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பில்லை. எங்களது அணியில் அந்த சாதனையை உடைக்க பாபர் அசாம் இருக்கிறார். அவர்களுடைய அணியில் சுப்மன் கில் இருக்கிறார். இந்த சாதனையை உடைக்கும் பயணத்தில் பாபர் அசாமை விட கில் சற்று பின்தங்கி இருப்பார்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.