ஐசிசி-யின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தேர்வு..!
|ஐசிசி-யின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை ஐசிசி அறிவித்துள்ளது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி பரிந்துரைத்திருந்தது.
அதில் சிறந்த வீரரை தேர்வு செய்ய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், நியூசிலாந்து ஆல் ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் மற்றும் வங்காளதேச வீரர் தைஜுல் இஸ்லாம் ஆகியோரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்திருந்தது.
இதேபோல் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்ய இந்திய வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா மற்றும் ஜிம்பாப்வே வீராங்கனை பிரிஷியஸ் மராஞ்ச் ஆகியோரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்திருந்தது.
இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதை வென்றவர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் மாத சிறந்த வீரராக பேட் கம்மின்சும், டிசம்பர் மாத சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் தீப்தி சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.