< Back
கிரிக்கெட்
அதிர்ஷ்டத்தால் மட்டுமே 50 ஓவர் உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது - விக்ரம் ரத்தோர்
கிரிக்கெட்

அதிர்ஷ்டத்தால் மட்டுமே 50 ஓவர் உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது - விக்ரம் ரத்தோர்

தினத்தந்தி
|
25 July 2024 11:33 AM IST

கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

மும்பை,

இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்திய அணியின் அப்போதைய பேட்டிங் பயிற்சியாளராக இருந்த விக்ரம் ராத்தோர் ஆஸ்திரேலியா அணி அதிர்ஷ்டத்தின் காரணமாக தான் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "உலகக்கோப்பை இறுதி போட்டியின்போது நாங்கள் ஆடுகளத்தை எங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி விட்டோம் என்று பல கதையை கட்டி வருகிறார்கள். அதில் துளி கூட உண்மை இல்லை. அதை நான் கொஞ்சம் கூட ஒப்புக் கொள்ள மாட்டேன். இறுதிப் போட்டியில் ஆடுகளம் யாருமே கணிக்க முடியாத அளவு போகப் போக பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. ஆனால் நாங்கள் ஆடுகளம் தோய்வாக மாறும் என்று கருதினோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. அது எப்படி அது போல் மாறியது என்று இன்னும் தெரியவில்லை.

நாம் முதலில் பேட்டிங் செய்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் அதிக ரன்கள் அடித்திருக்க வேண்டும். அந்த இறுதிப் போட்டியில் பொறுத்தவரையில் இப்படி நடந்திருக்கலாம்,அப்படி நடந்திருக்கலாம் என நாம் பேசலாம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் முக்கியம். இது போன்ற தொடர்களை நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிர்ஷ்டம் என்பது மிகவும் முக்கியமாகும். இறுதிப்போட்டி நாளன்று எங்களை விட ஆஸ்திரேலியா அணிக்குதான் அதிர்ஷ்டம் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அன்றைய நாளில் எங்களை விட சிறந்த கிரிக்கெட்டை ஆஸ்திரேலியா விளையாடியது. இதனால் தான் அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்