ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் பகல்-இரவு டெஸ்ட் இன்று தொடக்கம்
|ஆஸ்திரேலிய அணி இதுவரை ஆடியுள்ள 10 பகல்-இரவு டெஸ்டிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது பகல்-இரவு போட்டியாகும். இந்த போட்டிக்கு பிரத்யேகமாக பிங்க் (இளஞ்சிவப்பு) நிற பந்து பயன்படுத்தப்படும்.
பகல்-இரவு டெஸ்டில் தோல்வியே காணாத ஒரே அணி ஆஸ்திரேலியா தான். இதுவரை ஆடியுள்ள 10 பகல்-இரவு டெஸ்டிலும் வாகை சூடியுள்ளது. இன்றைய டெஸ்டிலும் ஆஸ்திரேலியாவே ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியில் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் களம் இறங்குகிறார். அணியை மூத்த வீரர் ஸ்டீவன் சுமித் மீண்டும் வழிநடத்த இருக்கிறார்.