< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா முதல் டி20; ஆஸ்திரேலியா அபார வெற்றி

image courtesy;twitter/ @CricketAus

கிரிக்கெட்

ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா முதல் டி20; ஆஸ்திரேலியா அபார வெற்றி

தினத்தந்தி
|
31 Aug 2023 11:41 AM IST

ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. அதில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்பென்சர் ஜான்சன், ஆரோன் ஹார்டி, மேத் ஷார்ட் போன்ற வீரர்கள் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர்.

முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்கள் ஹெட் மற்றும் மேத் ஷார்ட் விரைவில் ஆட்டம் இழந்தனர். அதன்பின் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். மறுமுனையில் ஜோஷ் இங்லிஸ் மற்றும் ஸ்டோய்னிஸ் விரைவில் ஆட்டம் இழந்தனர்.

அவர்களுக்கு பின் களம் இறங்கிய டிம் டேவிட் மிட்செல் மார்சுடன் கை கோர்த்து தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால் ரன்ரேட் ஜெட் வேகத்தில் எகிறியது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். டிம் டேவிட் 28 பந்துகளில் 64 ரன்கள் குவித்து கேட்ச் முறையில் ஆட்டம் இழந்தார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்த மிட்செல் மார்ஷ் 49 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கலம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டம் இழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் மட்டுமே நிலைத்து விளையாடினார். அரைசதம் அடித்த அவர் 43 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பேபி ஏபிடி' என்றழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸ் 5 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

வெறும் 15.3 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்த தென் ஆப்பிரிக்க அணி 115 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனால் 111 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் தன்வீர் சங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்