< Back
கிரிக்கெட்
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்... ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தடுமாறும் ஆஸ்திரேலியா
கிரிக்கெட்

அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்... ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தடுமாறும் ஆஸ்திரேலியா

தினத்தந்தி
|
7 Nov 2023 7:41 PM IST

ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையேயான ஆட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய 39வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் மோதி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக குர்பாஸ், இப்ராகிம் சத்ரான் களமிறங்கினர். குர்பாஸ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ரஹ்மத் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷஹிதி 26 ரன்னில் அவுட் ஆனார். ஆனால், மறுமுனையில் தொடக்க வீரர் இப்ராகிம் சத்ரான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 131 ரன்களில் சதம் விளாசினார்.

இதன் மூலம் உலகக்கோப்பையில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை இப்ராகிம் சத்ரான் பெற்றார். இதற்கு முன்னதாக 2015 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் வீரர் ஷின்வாரி 96 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற வரலாற்று சாதனையை இப்ராகிம் படைத்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், டிரவிஸ் ஹெட் களமிறங்கினர். 2 பந்துகளை சந்தித்த ஹெட் ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆனார். அடுத்துவந்த மிச்சேல் மார்ஷ் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் டேவிட் வார்னர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜோஷ் இங்லீஷ் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

தற்போதைய நிலவரப்படி, ஆஸ்திரேலியா 14 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. மேக்ஸ்வெல் 11 ரன்னிலும், லபுஷேன் 14 ரன்னிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 223 ரன்கள் தேவைப்படுகிறது. ஆப்கானிஸ்தான் வெற்றிபெற இன்னும் 6 விக்கெட்கள் தேவைப்படுகிறது. இதனால், ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

மேலும் செய்திகள்