இலங்கைக்கு உதவிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்- பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்கினர்
|இலங்கை சுற்றுப்பயணத்தில் கிடைத்த பரிசுத் தொகையை இலங்கை மக்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளனர்.
கொழும்பு,
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மூன்று டி20, ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக ஆஸ்திரேலியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. பின்னர் ஒருநாள் தொடரை இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் வென்றது. அதை தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என கணக்கில் சமனில் முடிந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள், இலங்கை அணியுடனான சுற்றுப்பயணத்தில் கிடைத்த பரிசுத் தொகையை இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்க நன்கொடையாக அளித்துள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்த தொகை பயன்படுத்தப்படவுள்ளது. இந்த தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
45,000 ஆஸ்திரேலியா டாலர்கள் (இந்திய மதிப்பில் 25,36,294 லட்சம்) நன்கொடை தொகையை ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் இணைந்து யுனிசெப் அமைப்பிடம் வழங்கி உள்ளனர். இந்த தொகை சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், கல்வி மற்றும் மனநல சேவைகள் போன்ற திட்டங்களுக்குச் பயன்படுத்தப்படவுள்ளது.