< Back
கிரிக்கெட்
அவர்கள் இல்லையென்றால் மட்டுமே ஆஸ்திரேலியாவால் இந்திய அணியை வீழ்த்த முடியும் - பாக். முன்னாள் வீரர் கருத்து

image courtesy: AFP

கிரிக்கெட்

அவர்கள் இல்லையென்றால் மட்டுமே ஆஸ்திரேலியாவால் இந்திய அணியை வீழ்த்த முடியும் - பாக். முன்னாள் வீரர் கருத்து

தினத்தந்தி
|
15 Aug 2024 6:58 PM IST

ரிக்கி பாண்டிங் இந்தியாவுடன் மனதளவில் விளையாட தொடங்கியுள்ளதாக பாசித் அலி கூறியுள்ளார்.

லாகூர்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான (2024/25) டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இந்திய அணி 2018/19 மற்றும் 2020/21 பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடியது. அந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்தியா கடந்த 4 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியை தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது.

அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது. அதனால் ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இம்முறை நிச்சயம் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரிக்கி பாண்டிங் இப்படியெல்லாம் பேசி இந்தியாவுடன் மனதளவில் விளையாடத் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார். மேலும் பும்ரா, ரோகித், கோலி போன்ற முக்கிய இந்திய வீரர்கள் விளையாடமல் போனால் மட்டுமே ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஆஸ்திரேலியா 3 - 1 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடிக்கும் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது பெரிய கருத்து. மனதளவிலான போட்டிகள் தொடங்கியுள்ளன. இருப்பினும் இந்த மைண்ட் கேம்களை இந்திய வீரர்களும் பயிற்சியாளர்களும் அறிவார்கள். இந்தியா கடந்த 2 பார்டர் - கவாஸ்கர் கோப்பைகளை ஆஸ்திரேலியாவில் வென்றுள்ளது. அப்போதைய நிலைமைக்கும் இப்போதைய நிலைமைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதே என்னுடைய கருத்தாகும்.

ஆஸ்திரேலியர்களை பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும். அவர்கள் இது போன்ற கருத்துக்கணிப்புகளை சொல்வதை பொழுதுபோக்காக வைத்திருக்கின்றனர். ஒருவேளை பும்ரா, ஷமி, சிராஜ், கோலி, ரோகித், ஜெய்ஸ்வால் இல்லையென்றால் மட்டுமே ஆஸ்திரேலியா 5 - 0 கணக்கில் இந்தியாவை தோற்கடிக்க முடியும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்