டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
|டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.
பிரிட்ஜ்டவுன்,
டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில், பார்படாசின் பிரிட்ஜ்டவுன் நகரில் இன்று நடைபெற்ற 17வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். வார்னர் 16 பந்துகளில் 39 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். ஹெட் 18 பந்துகளில் 34 ரன்கள் குவித்த நிலையில் ஆர்ச்சர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
அடுத்துவந்த கேப்டன் மிச்சேல் மார்ஷ் 35 ரன்களிலும், மேக்ஸ்வெல் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய டிம் டேவிட் 11 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டாய்னஸ் 17 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் கிறிஸ் ஜோர்டன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 202 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய இருவரும் சிறப்பான தொடக்கம் அளித்தனர். சால்ட் 23 பந்துகளில் 37 ரன்கள் குவித்த நிலையில் சாம்பா பந்து வீச்சில் அவுட் ஆனார். கேப்டன் பட்லர் 28 பந்துகளில் 42 ரன்கள் குவித்த நிலையில் சாம்பா பந்து வீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
பின்னர் வந்த இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.