< Back
கிரிக்கெட்
இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா..!
கிரிக்கெட்

இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா..!

தினத்தந்தி
|
19 Nov 2023 9:24 PM IST

ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது.

அகமதாபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த விராட் கோலி(54 ரன்கள்) சற்று நிதானமாக ஆடி அரை சதத்தைக் கடந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். கே.எல்.ராகுல் 66 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் டேவிட் வார்னர் 7 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து மார்னஸ் லபுசேனுடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதி செய்தது. டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் விளாசினார்.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே 5 முறை உலக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது 6-வது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது.

மேலும் செய்திகள்