4-வது ஓவரின் முடிவில் நான் பேட்டிங் செய்வதற்கான தேவை வராது என்று நினைத்தேன் - தினேஷ் கார்த்திக்
|ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
பெங்களூரு,
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 37 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் சிராஜ், யாஷ் தயாஸ்ல், வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 64 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் ஜோசுவா லிட்டில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் முகமது சிராஜ்-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில் கூறியதாவது,
எங்கள் பேட்டிங் துவங்கியதும் டீ குடிக்கத் துவங்கினேன். அப்போது 4 ஓவரின் முடிவில் நான் பேட்டிங் செய்வதற்கான தேவை வராது என்று நினைத்தேன். ஆனால் அதன் பின் சரிவு ஏற்பட்டதால் நான் பேட்டிங் செய்ய வேண்டியிருந்தது. நான் அடிக்கும் பவுண்டரிகள் கிரிக்கெட்டின் அடிப்படையில் இருந்து வருகிறது. இந்த வேலையை செய்து முடிக்க எனக்கு நானே ஆதரவு கொடுக்கிறேன்.
பிட்ச் பந்து வீச்சுக்கு நன்றாக இருந்தது. டாஸ் வென்றது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் எங்களுடைய பவுலர்கள் எங்களின் வெற்றிக்கான வேலையை அழகாக செய்தனர். டு பிளேஸிஸ் – விராட் கோலி பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது.
ஆனால் முதலில் பேட்டிங் செய்திருந்தால் அவர்கள் இந்த ஷாட்டுகளை அடித்திருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. உனக்கு வருவதை அடி என்று ஸ்வப்னில் சிங்கிடம் சொன்னேன். ஒருவேளை ஸ்வீப் அடிப்பதை நன்றாக உணர்ந்தால் அதை செய்யுமாறு சொன்னேன். இவ்வாறு அவர் கூறினார்.