ஆசிய கோப்பை: பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடக்கம் - இந்தியா-இலங்கை இன்று மோதல்
|7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்குகிறது.
சில்கெட்,
7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் வங்காளதேசம்-தாய்லாந்து, இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் 4 தொடர் ஒருநாள் போட்டி (50 ஓவர்) வடிவில் நடத்தப்பட்டது. 2012-ம் ஆண்டில் இருந்து இந்த போட்டி20 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த 20 ஓவர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த 113 ரன் இலக்கை வங்காளதேச அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்து 'திரில்' வெற்றியை ருசித்து முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது. கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு நடக்க இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் 8-வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் வங்காளதேசம், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
தொடக்க நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. காலை 8.30 மணிக்கு தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வங்காளதேச அணி, தாய்லாந்தை சந்திக்கிறது.
நிகார் சுல்தானா தலைமையிலான வங்காளதேச அணி சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை தகுதி சுற்றில் சாம்பியன் பட்டத்தை வென்ற உத்வேகத்துடன் இந்த போட்டியில் களம் காணுகிறது. நருமோல் சைவாய் தலைமையிலான தாய்லாந்து அணி, வலுவாக உள்ள வங்காளதேசத்தின் சவாலை சமாளிப்பது கடினம் தான். இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 தடவையும் வங்காளதேச அணியே வென்று இருக்கிறது.
பகல் 1 மணிக்கு தொடங்கும் 2-வது லீக் ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அண்மையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி சூப்பர் பார்மில் இருக்கிறது.
இலங்கை அணியை பொறுத்தமட்டில் கேப்டன் சமாரி அட்டப்பட்டுவையே அதிகம் நம்பி இருக்கிறது. எனவே இந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணியின் கையே ஓங்கி நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இந்தியா 16 ஆட்டத்திலும், இலங்கை 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.