ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
|ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் சார்ஜாவில் நடக்கும் ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.
சூப்பர்4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்த உற்சாகத்தில் உள்ள பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால் சிக்கலின்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும்.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது வலதுகால் முட்டியில் காயமடைந்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானுக்கு முன்னெச்சரிக்கையாக இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இன்னொரு பக்கம், சுழற்பந்து வீச்சை அதிகமாக சார்ந்து இருக்கும் ஆப்கானிஸ்தான் கட்டாய வெற்றி நெருக்கடியில் களம் இறங்குகிறது. சூப்பர்4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வியை அடைந்த ஆப்கானிஸ்தானுக்கு இது வாழ்வா-சாவா? ஆட்டமாகும். இதில் ஜெயித்தால் மட்டுமே இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க முடியும்.20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டத்தில் மோதியுள்ளன. இரண்டிலும் பாகிஸ்தான் அணியே வெற்றி கண்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.