ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: பதும் நிசாங்கா அரைசதம்- பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
|இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுப்போட்டிக்கு முன்னேறி விட்டன. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் இறுதி போட்டிக்கு முன்னேறிய இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனாகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் களமிறங்கினர். 14 ரன்கள் எடுத்திருந்த போது பிரமோத் மதுஷன் பந்துவீச்சில் குசல் மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து ரிஸ்வான் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பஹார் ஜமான் 13 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் பாகிஸ்தான் அணி சரிவை நோக்கி சென்றது. அணியின் கேப்டன் பாபர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். குஷ்தில் ஷா (4 ரன்கள்) இப்திகார் அகமது (13 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்வரிசையில் அதிகபட்சமாக முகமது நவாஸ் 26 ரன்கள் எடுத்தார். இறுதியில் இலங்கை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்களையும், தீக்சனா மற்றும் மதுஷன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். இலங்கை அணிக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரின் 2-வது பந்தில் குசல் மெண்டிஸ் டக் அவுட்டாகி வெளியேற அவரை தொடர்ந்து களமிறங்கிய தனுஷ்கா குணதிலகா 2-வது ஓவரில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் இளம் வீரர் பத்தும் நிசாங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இலங்கை அணி 80 ரன்கள் எடுத்திருந்த போது பனுகா ராஜபக்சா 24 ரன்களில் உஸ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கேப்டன் ஷனகா களமிறங்கினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிசாங்கா அரைசதம் கடந்து அசத்தினார். இலங்கை அணி வெற்றியை நெருங்கும் நேரத்தில் கேப்டன் ஷனகா 16 பந்துகளில் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் பதும் நிசாங்காவுடன் ஹசரங்கா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி பாதை நோக்கி அழைத்து சென்றது. இறுதியில் இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்த 124 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. தொடக்க வீரராக களமிறங்கிய பதும் நிசாங்கா 48 பந்துகளில் 55 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நாளை மறுநாள் நடைபெறும் இறுதி போட்டியில் மீண்டும் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.