< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை; இந்தியாவுக்கு இலங்கை பயம் காட்டியது- ரவி சாஸ்திரி
கிரிக்கெட்

ஆசிய கோப்பை; 'இந்தியாவுக்கு இலங்கை பயம் காட்டியது'- ரவி சாஸ்திரி

தினத்தந்தி
|
13 Sept 2023 4:55 PM IST

ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இதில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்து இருந்தது. பின்னர் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 213 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சுழற்பந்து வீச்சாளர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியை 41.3 ஓவரில் 172 ரன்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் ஆல் அவுட் ஆக்கினர். இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகள், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியாவுக்கு இலங்கை பயம் காட்டியது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,

''இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் வெற்றி வித்தியாசம் பெரியது என்றாலும், குறைந்த இலக்கை கொண்டு விளையாடும் போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ஒரு வலிமையான பயம் கொடுக்கப்பட்டது. இலங்கை முக்கியமான கட்டத்தில் பார்ட்னர்ஷிப் உருவாக்கியது. அது இந்தியாவை அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. இருப்பினும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் மறக்கமுடியாத வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்'' என்று கூறினார்.

மேலும் அவர் "இந்திய அணிக்கு இது போன்ற ஒரு ஆட்டம் தேவைப்பட்டது. வீரர்கள் போராட வேண்டும். வீரர்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட வேண்டும். வீரர்கள் நன்றாக பீல்டிங் செய்ய வேண்டும். இது களத்தில் ஒரு கூட்டு ஆட்டமாக இருந்தது. இது இறுதிப்போட்டியில் வீரர்களை நல்ல நிலையில் வைத்திருக்கும்"என்றார்.

இலங்கை அணியையும் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். அதில்

"இது ஒரு அற்புதமான ஆட்டம். இந்தியா 80/0 ஆக இருந்தது, பின்னர் 213 ரன்களில் ஆட்டமிழந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இது ஒரு சிறந்த முயற்சி. துனித் வெல்லலகேவிடமிருந்து அற்புதமான செயல்திறன். அவர் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார், பின்னர் அவர் சிறப்பான முறையில் பேட்டிங் செய்தார். அவர் தனது வயதை விட அதிக பக்குவம் கொண்ட வீரராக இருக்கிறார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்