< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை தொடர்; முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் கே.எல்.ராகுல் இடம் பெற மாட்டார் - பயிற்சியாளர் ராகுல் டிராவிட்
கிரிக்கெட்

ஆசிய கோப்பை தொடர்; முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் கே.எல்.ராகுல் இடம் பெற மாட்டார் - பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

தினத்தந்தி
|
29 Aug 2023 2:33 PM IST

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் இரு லீக் ஆட்டங்களில் கே.எல்.ராகுல் இடம் பெற மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) பாகிஸ்தானில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடருக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்திய அணி பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்ட ஸ்ரேய்ஸ் அய்யர், கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டிருந்தனர். மேலும் திலக் வர்மாவும் இடம் பெற்றுள்ளார். சஞ்சு சாம்சன் ரிசர்வ் வீரராக அணியில் பயணிக்க உள்ளார்.

இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்ட கே.எல்.ராகுல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதல் இரு ஆட்டங்களில் ஆட மாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ராகுல் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டார். நாங்கள் எதிர்பார்த்தபடியே அவர் சிறப்பாக முன்னேறி வருகிறார்.

ஆனால், ஆசிய கோப்பை தொடரின் முதல் இரு லீக் ஆட்டங்களில் (பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துக்கு எதிராக) அவர் அணியில் இடம் பெறமாட்டார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருப்பார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் பெங்களூரில் தங்கியிருக்கும் ராகுல், ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 கட்டத்திற்கு முன்னதாக செப்டம்பர் 4 ஆம் தேதி மீண்டும் மதிப்பீடு செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.



மேலும் செய்திகள்