ஆசிய கோப்பை: சச்சின் - அப்ரிடி சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு
|ஆசிய கோப்பை தொடரில் சச்சின் மற்றும் அப்ரிடி சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன் பின்னர், ஆசிய கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதன்படி இந்த போட்டி அங்குள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கி செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது.
துபாயில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் அப்ரிடி சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி உள்ளார். அவர் 27 ஆட்டத்தில் 26 சிக்சர்கள் அடித்து உள்ளார். அவரது சாதனையை முறியடிக்க இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்னும் 6 சிக்சர்களே தேவை. ரோகித் சர்மா இதுவரை 27 போட்டியில் 21 சிக்சர் அடித்துள்ளார்.
மேலும், ஆசிய கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்னை தொடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறவும் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு உள்ளது. அவர் 883 ரன் எடுத்து உள்ளார். விராட் கோலி 766 ரன்கள் (16 ஆட்டம்) எடுத்து உள்ளார். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக டெண்டுல்கர் 971 ரன்கள் (23 ஆட்டம்) எடுத்துள்ளார். இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா 24 ஆட்டத்தில் 1220 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.