ஆசியகோப்பை: ரோகித், கில் அரைசதம்.. நேபாளத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இந்தியா
|இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பல்லகெலெ,
ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நேபாளம் முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக விளையாடிய குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் இருவரும் முறையே 38 மற்றும் 58 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய பீம் ஷர்கி 7 ரன்கள், ரோகித் பவுடல் 5 ரன்கள், குஷால் மல்லா 2 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். அடுத்து வந்த குல்ஷன் ஜா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நேபாளம் 37.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்ற நிலையில் ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
தொடர்ந்து திபேந்திர சிங் 29 ரன்களிலும் சோம்பால் கமி 48 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இந்த நிலையில் 48.2 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழை இடைவிடாது பெய்துகொண்டிருந்ததால், போட்டி மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மழை நின்ற நிலையில், போட்டி மீண்டும் தொடங்கியதுடன், ஓவர்கள் குறைக்கப்பட்டது. இந்திய அணிக்கு 23 ஓவர்கள் கொடுக்கப்பட்டு, அதில் 145 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சும்பன் கில் விளையாடினர். இருவரும் எதிரணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டதுடன், அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர்.
இந்த ஜோடியை பிரிக்க நேபாள பந்துவீச்சாளர்கள் பல்வேறு யுக்தியை பயன்படுத்தியும் பலனளிக்கவில்லை. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதமடித்தனர்.
இறுதியில் இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 67 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.