20 ஓவர் போட்டிகளில் முஜீப் உர் ரஹ்மான் புதிய சாதனை
|ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.
சார்ஜா,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இந்த போட்டி தொடரில் சார்ஜாவில் இன்று இரவு நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் (பி பிரிவு) அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக முஜீப் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. நஜிபுல்லா ஜட்ரன் (43 ரன்கள்), இப்ராகிம் ஜட்ரன் (42 ரன்கள்) அதிரடியால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
மேலும் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முஜீப் உர் ரஹ்மான் 4 ஓவர் வீசி 16 ரன்களை விட்ட கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியில் 3 விக்கெட்கள் கைப்பற்றியதன் மூலம் அவர் 20 ஓவர் போட்டிகளில் 200 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
குறிப்பாக 20 ஓவர் போட்டிகளில் 200 விக்கெட்களை கைப்பற்றிய இளம் வீரர்கள் பட்டியலில் அவர் 2-வது இடத்தை பிடித்துள்ளார். முஜீப் உர் ரஹ்மான், 21 வயது 155 நாட்கள் இந்த சாதனையை படைத்துள்ளார். முதல் இடத்தில் சக வீரர் ரசித் கான் உள்ளார். அவர் இந்த சாதனையை 20 வயது 31 தினங்களில் படைத்துள்ளார்.