ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் பலப்பரீட்சை
|ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) போட்டி தொடரில் துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை லீக் ஆட்டத்தில் மோதிய இவ்விரு அணிகளும் அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்கின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 2-வது லீக் ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கையும் தோற்கடித்து 'ஏ' பிரிவில் முதலிடத்தை பிடித்து சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் சிறப்பான தொடக்கம் காண வேண்டியது அவசியமானதாகும். விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆல்-ரவுண்டராக அசத்திய ஹர்திக் பாண்ட்யா அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். காயம் காரணமாக விலகிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள அக்ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கச்சிதமாக செயல்பட்டு வருகிறார். ஹாங்காங்க்கு எதிரான ஆட்டத்தில் அவேஷ் கான், அர்ஷ் தீப் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தனர். யுஸ்வேந்திர சாஹல் இரு ஆட்டங்களிலும் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இது இந்திய அணிக்கு கவலை அளிக்கும் விஷயமாகும்.
பாபர் அசாம்
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி திரில்லிங்கான முதலாவது லீக்கில் இந்திய அணியிடம் வீழ்ந்தது. ஆனால் இரண்டாவது லீக்கில் 155 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை துவம்சம் செய்து 'ஏ' பிரிவில் 2-வது இடம் பெற்று சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தது. ஹாங்காங்குக்கு எதிராக 2 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணி 10.4 ஓவர்களில் 38 ரன்னுக்குள் அந்த அணியை சுருட்டி கம்பீரத்தை காட்டியது.
எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் அசாம் ஏமாற்றம் அளித்தாலும், முகமது ரிஸ்வான் (78 நாட்-அவுட்), பஹர் ஜமான் (53 ரன்கள்) அரைசதமும், குஷ்தில் ஷா ஆட்டம் இழக்காமல் அதிரடியாக 35 ரன்னும் எடுத்து அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினர். பவுலிங்கில் ஷதப் கான், முகமது நவாஸ், நசீம் ஷா உள்ளிட்டோர் கலக்கினர். முந்தைய ஆட்டத்தில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானி இந்த ஆட்டத்தில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஹசன் அலி அல்லது முகமது ஹஸ்னைன் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 2-வது வெற்றியை ருசிக்க இந்திய அணி தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
11-வது முறையாக...
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 7-ல் இந்தியாவும், 2-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. சமனில் முடிந்த மற்றொரு ஆட்டத்தில் பவுல்-அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது.
பரம போட்டியாளர்களான இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களும் இனம் புரியாத உணர்ச்சிக்கு உட்படுவது உண்டு. நெருக்கடி நிறைந்த இந்த போட்டியில் எந்த அணி அழுத்தத்தை திறம்பட கையாள்கிறதோ அந்த அணிக்கே அனுகூலமான முடிவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் சாதகமாக இருப்பதால் இந்த போட்டியில் டாஸ்சும் முக்கிய பங்கு வகிக்கும்.
இரவு 7.30 மணிக்கு...
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம், பஹர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஷதப் கான், ஆசிப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா, ஹசன் அலி அல்லது முகமது ஹஸ்னைன்.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.