இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி: வெல்லாலகேவின் சுழல்ஜாலம் வீண்
|ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகே 5 விக்கெட் வீழ்த்தியும் பலன் இல்லை.
கொழும்பு,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.
இந்த நிலையில் சூப்பர்4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் நேற்று மல்லுகட்டின. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டார்.
'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி அவரும், சுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். சூப்பராக மட்டையை சுழற்றிய கேப்டன் ரோகித் சர்மா ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டார். ஷனகாவின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை சாத்திய அவர், ரஜிதா, பதிரானா ஓவர்களில் சிக்சரும் பறக்க விட்டார்.
மிரட்டிய வெல்லாலகே
11 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் திரட்டி வலுவான அஸ்திவாரத்தை உருவாக்கியது. 12-வது ஓவரில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவை பந்துவீச கேப்டன் ஷனகா அழைத்தார். அதற்கு உடனடி பலன் கிடைத்தது. அவர் தனது முதல் பந்திலேயே சுப்மன் கில்லை (19 ரன்) போல்டாக்கினார். தொடர்ந்து தனது அடுத்தடுத்த ஓவர்களில் விராட் கோலி (3 ரன்), ரோகித் சர்மா (53 ரன், 48 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரின் விக்கெட்டையும் வீழ்த்தி மிரள வைத்தார். முந்தைய நாள் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் நொறுக்கிய விராட் கோலி இந்த ஆட்டத்தில் ஒற்றை இலக்கத்தை கூட தாண்டாமல் ஏமாற்றம் அளித்தார்.
ஆடுகளம் முழுக்க முழுக்க சுழலின் சொர்க்கமாக காணப்பட்டது. பந்து நன்கு சுழன்று திரும்பியது. அதே நேரத்தில் பந்து அதிகமாக எழும்பாததால் கணித்து ஆடுவதில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.
பாண்ட்யா ஏமாற்றம்
4-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலும், இஷான் கிஷனும் அணியை சரிவில் இருந்து மீட்பது போல் தெரிந்தது. ஆனால் இந்த கூட்டணிக்கும் வெல்லாலகே 'வேட்டு' வைத்தார். ஸ்கோர் 154-ஆக உயர்ந்த போது ராகுல் (39 ரன், 44 பந்து, 2 பவுண்டரி) வெல்லாலகேவின் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டார். இஷான் கிஷன் 33 ரன்னில் (61 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார்.
வெல்லாலகேவுடன், பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்கள் சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோரும் ரன்வேகத்தை கட்டுப்படுத்தி திணறடித்தனர். ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபட்டதால் 14-வது ஓவரில் இருந்து 48-வது ஓவரை இடைவிடாது சுழல்தாக்குதலை அந்த அணியின் கேப்டன் ஷனகா பயன்படுத்தி நெருக்கடி கொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா (5 ரன்), ரவீந்திர ஜடேஜாவும் (4 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. 33-வது ஓவரில் இருந்து 47-வது ஓவர் பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை.
ஒரு கட்டத்தில் இந்தியா 200 ரன்களையாவது தொடுமா என்ற கேள்வி எழுந்தது. நல்ல வேளையாக ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் கடைசி கட்டத்தில் கைகொடுத்து ஸ்கோர் 200-ஐ கடக்க உதவினார். இறுதி விக்கெட்டாக கேட்ச் ஆன அக்ஷர் 26 ரன்னில் (36 பந்து, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார்.
214 ரன் இலக்கு
முடிவில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எக்ஸ்டிரா வகையில் இந்தியாவுக்கு 20 வைடு உள்பட 21 ரன்கள் கிடைத்தது. இலங்கை தரப்பில் 20 வயதான வெல்லாலகே 10 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 40 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அறுவடை செய்வது இதுவே முதல் முறையாகும். அசலங்கா 18 ரன் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அவருக்கும் இது சிறந்த பந்துவீச்சாக பதிவானது. மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா ஒரு விக்கெட் எடுத்தார். இடையில் மழையால் ஆட்டம் 50 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்து 214 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கைக்கு தொடக்கத்திலேயே வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 'இரட்டை செக்' வைத்தார். அவரது பந்துவீச்சில் நிசாங்கா (6 ரன்), குசல் மென்டிஸ் (15 ரன்) பணிந்தனர். அதன் பிறகு கருணாரத்னே (2 ரன்), சமரவிக்ரமா (12 ரன்), சாரித் அசலங்கா (22 ரன்), கேப்டன் ஷனகா (9 ரன்) குறிப்பிட்ட இடைவெளியில் பெவிலியன் திரும்பினர். அப்போது இலங்கை 6 விக்கெட்டுக்கு 99 ரன்களுடன் (25.1 ஓவர்) தள்ளாடியது.
இலங்கை தோல்வி
இதைத் தொடர்ந்து ஆல்-ரவுண்டர்கள் தனஞ்ஜெயா டி சில்வாவும், துனித் வெல்லாலகேவும் ஜோடி போட்டு அணியை சிக்கலில் இருந்து படிப்படியாக மீட்டனர். இவர்கள் ஆடிய விதம் அந்த அணிக்கு கொஞ்சம் புத்துயிர் ஊட்டியது. ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டிய சூழலில், இந்த ஜோடி பிரிந்தது. ஸ்கோர் 162-ஆக உயர்ந்தபோது, ஜடேஜாவின் சுழலில் தனஞ்ஜெயா டி சில்வா (41 ரன், 66 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார். அதன் பிறகு தங்களது பிடியை மேலும் இறுக்கிய இந்திய பவுலர்கள் எஞ்சிய விக்கெட்டுகளை சீக்கிரம் காலி செய்தனர்.
இலங்கை அணி 41.3 ஓவர்களில் 172 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெல்லாலகே 42 ரன்களுடன் (46 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இறுதிப்போட்டியில் இந்தியா
சூப்பர்4 சுற்றில் 2-வது வெற்றியை ருசித்த இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்தியாவின் வெற்றியால் வங்காளதேசத்துக்கு லேசாக ஒட்டிக்கொண்டிருந்த இறுதி சுற்று வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
நாளை (வியாழக்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் தலா 2 புள்ளியுடன் உள்ள பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
சுழற்பந்துவீச்சில் முழுமையாக சரிந்த இந்திய பேட்ஸ்மேன்கள்
இலங்கை அணி கடைசியாக விளையாடிய 14 ஆட்டங்களிலும் எதிரணியை ஆல்-அவுட் ஆக்கி இருக்கிறது. இதில் நேற்றைய இந்தியாவுக்கு எதிராக ஆட்டமும் அடங்கும். வேறு எந்த அணியும் இச்சாதனையை செய்ததில்லை.
மேலும் இந்த ஆட்டத்தில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளும் சுழற்பந்து வீச்சிலேயே சரிந்தன. ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சுழல்வலையில் சிக்கி இருப்பது இதுவே முதல் நிகழ்வாகும். ஒட்டுமொத்தத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் முழுமையாக கபளீகரம் செய்வது இது 10-வது முறையாகும்.
கோலி-ரோகித் ஜோடி சாதனை
இந்த ஆட்டத்தில் 2-வது விக்கெட்டுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி 10 ரன் எடுத்தது. இதையும் சேர்த்து அவர்கள் பார்ட்னர்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். 86 ஒரு நாள் போட்டி இன்னிங்சில் இதை எட்டி சாதனை படைத்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கார்டன் கிரீனிட்ஜ் டெஸ்மான்ட் ஹெய்ன்ஸ் ஜோடி 97 இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்களை எட்டியதே அதிவேகமாக இருந்தது.
மேலும் இந்திய தரப்பில் தெண்டுல்கர் சவுரவ் கங்குலி, ஷிகர் தவான் ரோகித் சர்மா ஆகியோருக்கு பிறகு 5 ஆயிரம் ரன்களை கடந்த ஜோடியாகவும் ரோகித் கோலி திகழ்கிறார்கள்.
இலங்கையின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி
இந்த ஆட்டத்திற்கு முன்பாக இலங்கை அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து அதிக வெற்றிகளை ஈட்டிய 2-வது அணியாக விளங்கியது. அவர்களின் வெற்றிப்பயணத்துக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.