ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி
|ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 173 ரன்கள் குவித்துள்ளது.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் இந்திய அணி எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இன்று இலங்கை அணியை இந்திய அணி சந்தித்தது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களம் இறங்கினர். இதில் ஆட்டத்தின் 2-வது ஓவரில் ராகுல் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். நல்ல பார்மில் இருக்கும் கோலி நன்றாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இதையடுத்து ரோகித்துடன் சூர்ய குமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில், சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். அபாரமாக ஆடிய ரோகித் 72 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். சிறப்பாக ஆடிய ரோகித் - சூர்ய குமார் யாதவ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். இதற்கிடையில் சூர்ய குமார் யாதவ் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்தாக தீபக் ஹூடா களம் இறங்கினர். அவர் ( 0 ) ரன்னில் இருக்கும் போது கேட்ச் முறையில் அவுட் ஆனார். ஆனால் அது நோ-பால் என அறிவிக்கப்பட்டதால் அவர் மீண்டும் ஆடினார். அதை பயன்படுத்த தவறிய ஹூடா 3 ரன்னில் போல்ட் ஆனார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி ஆட உள்ளது.