ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம் - முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் மோதல்
|ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த போட்டி அரசியல் பிரச்சினை, பாதுகாப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் சில முறை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் ஆண்டு போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்தை கடைசி பந்தில் வீழ்த்தி வாகை சூடியது.
ஆரம்பத்தில் ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 20 ஓவர் வடிவம் புகுத்தப்பட்டது. அதாவது அந்த சமயத்தில் எந்த உலக கோப்பை போட்டி நெருங்கி வருகிறதோ அதற்கு சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு அந்த வடிவில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் ஆசிய கோப்பையும் 20 ஓவர் வடிவில் அரங்கேறுகிறது. அடுத்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை வருவதால் அடுத்த ஆசிய கோப்பை போட்டி 50 ஓவர் வடிவில் நடத்தப்படும்.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தங்களால் இந்த போட்டியை நடத்த இயலாது என்று கூறி விட்டது. இதையடுத்து அங்கு நடைபெற இருந்த 15-வது ஆசிய கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதன்படி இந்த போட்டி அங்குள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 7 முறை கோப்பையை வென்று இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.
இந்த முறை சரிசம பலத்துடன் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்றே கோப்பையை கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பாகும். அத்துடன் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை மோதும் ஆட்டம் தான் இந்த தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. விராட் கோலி- பாபர் அசாம் ஆகியோரில் யாருடைய கை ஓங்கும் என்பது தொடர்பான முன்னாள் வீரர்களின் புள்ளி விவர விவாதங்கள், ஆரூடங்கள் இப்போதே ஆர்வத்தை தூண்டியுள்ளன.
விரைவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் அந்த போட்டிக்கு தங்கள் அணியை இறுதி செய்ய ஒவ்வொரு அணி நிர்வாகமும் தீவிரம் காட்டுவதால் அந்த வகையிலும் இந்த ஆசிய கோப்பை போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
துபாயில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. வெற்றியுடன் கணக்கை தொடங்க இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் பரபரப்புக்கு குறைவிருக்காது. இலங்கை அணியில் குசல் மென்டிஸ், அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, ஹசங்கா உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். அதே சமயம் ஆப்கானிஸ்தான் ரஷித்கான், முகமது நபி, ஹஸ்ரத்துல்லா ஷசாய், ஜட்ரன் ஆகியோரைத் தான் மலை போல் நம்பி இருக்கிறது. இவர்கள் ஜொலித்தால் தான் இலங்கைக்கு சவால் அளிக்க முடியும்.
அமீரக ஆடுகளங்கள் பொதுவாக சுழலுக்கு ஓரளவு கைகொடுக்கும். இங்கு பகலில் வெயில் வாட்டி வதைக்கும். இரவில் புழுக்கத்தில் வியர்த்து கொட்டும். இத்தகைய சூழலை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு கனியும்.
20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை சந்தித்துள்ளன. 2016-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இலங்கை: ஷனகா (கேப்டன்), குணதிலகா, பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சே, அஷென் பண்டாரா, தனஞ்ஜெயா டி சில்வா, ஹசரங்கா, தீக்ஷனா, ஜெப்ரி வண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, சமிகா கருணாரத்னே, தில்ஷன் மதுஷனகா, மதீஷா பதிராணா, நுவானிது பெர்னாண்டோ, தினேஷ் சன்டிமால்.
ஆப்கானிஸ்தான்: முகமது நபி (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், அப்சர் ஷசாய், அஸ்மத்துல்லா ஒமர்ஷாய், பரித் அகமது மாலிக், பாசல் ஹக் பரூக்கி, ஹஷ்மத்துல்லா ஷகிடி, ஹஸ்ரத்துல்லா ஷசாய், இப்ராகிம் ஜட்ரன், கரிம் ஜனத், முஜீப் ரகுமான், நவீன் உல் ஹக், நூர் அகமது, ரமனுல்லா குர்பாஸ், ரஷித்கான், சமியுல்லா ஷின்வாரி, உஸ்மான் கானி.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.