< Back
கிரிக்கெட்
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணியை வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்கு இலங்கை தகுதி
கிரிக்கெட்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணியை வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்கு இலங்கை தகுதி

தினத்தந்தி
|
1 Sept 2022 11:31 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி வங்காளதேசத்தை வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது.

துபாய்,

6 அணிகள் பங்கேற்றுள்ள 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் (பி பிரிவு) மல்லுகட்டின.

'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேச அணியில் சபிர் ரகுமான் (5 ரன்) ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் சில சிக்சர்களை தெறிக்கவிட்டு அதிரடியான தொடக்கம் தந்தார். 'பவர்-பிளே'யில் அந்த அணி 55 ரன்கள் சேர்த்தது. ஹசன் மிராஸ் தனது பங்குக்கு 38 ரன்கள் (26 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். தொடர்ந்து முஷ்பிகுர் ரஹிம் 4 ரன்னிலும், கேப்டன் ஷகிப் அல்-ஹசன் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

5-வது விக்கெட்டுக்கு அபிப் ஹூசைனும், மக்முதுல்லாவும் கைகோர்த்து ரன்ரேட்டை கணிசமாக உயர்த்தி சவாலான நிலையை நோக்கி பயணிக்க உதவினர். ஸ்கோர் 144-ஐ எட்டிய போது அபிப் ஹூசைன் 39 ரன்களிலும் (22 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), மக்முதுல்லா 27 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

கடைசி கட்டத்தில் மொசாடெக் ஹூசைன் (9 பந்தில் 4 பவுண்டரியுடன் 24 ரன்), தஸ்கின் அகமது (11 ரன்) அணி 180 ரன்களை கடக்க வழிவகுத்தனர்.

20 ஓவர் முடிவில் வங்காளதேசம் 7 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் அந்த அணி வீரர்கள் 60 ரன்கள் திரட்டினர். இலங்கை தரப்பில் ஹசரங்கா, சமிகா கருணாரத்னே தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து 184 ரன் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் குசல் மென்டிஸ் நிலைத்து நின்று விளையாட இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தது. ஒரு கட்டத்தில் 77 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இந்த சூழலில் குசல் மென்டிசுடன், கேப்டன் தசுன் ஷனகா இணைந்து அணியை தூக்கி நிறுத்தினார். மென்டிஸ் 60 ரன்களிலும் (37 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ஷனகா 45 ரன்களிலும் (33 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேற கடைசி கட்டத்தில் பரபரப்பு தொற்றியது.

இலங்கை வெற்றி

இறுதி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் இருந்தது. 20-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் வீசினார். இதில் முதல் பந்தில் ஒரு ரன் வந்தது. 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அசிதா பெர்னாண்டோ (10 ரன், நாட்-அவுட்) 3-வது பந்தில் 2 ரன் எடுத்தார். மேலும் அது 'நோ-பால்' என்று அறிவிக்கப்பட்டதால் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இலங்கை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. இந்த மைதானத்தில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இது தான். முக்கியமான கட்டத்தில் 4 நோ-பால் மற்றும் 8 வைடுகள் வீசியது வங்காளதேசத்துக்கு பின்னடைவாக அமைந்தது.

'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான் (2 வெற்றி), இலங்கை (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) அணிகள் சூப்பர்4 சுற்றை எட்டின. 2 ஆட்டத்திலும் தோற்ற வங்காளதேசம் வெளியேறியது.

மேலும் செய்திகள்