ஹர்திக் பாண்டியா அதிரடி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அட்டகாசமான வெற்றி
|ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் அட்டகாசமான வெற்றியை ருசித்தது.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழையும்.
இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மல்லுகட்டின. இந்திய அணியில் ஆச்சரியம் அளிக்கும் முடிவாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தான் அணியில் அறிமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா இடம் பெற்றார்.
அசாம் 10 ரன்
'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பாகிஸ்தானை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி கேப்டன் பாபர் அசாமும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். புவனேஷ்வர்குமாரின் முதல் ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ. ஆன ரிஸ்வான், டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின் படி அப்பீல் செய்து தப்பினார். ஆனால் பாபர் அசாம் (10 ரன்) நிலைக்கவில்லை. புவனேஷ்வர்குமார் வீசிய பவுன்சர் பந்தை புல்ஷாட்டாக அடிக்க முயற்சித்த போது, சரியாக 'கிளிக்' ஆகாத அந்த பந்து அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. அடுத்து வந்த பஹர் ஜமானும் (10 ரன்) இதே போல் 'ஷாட்பிட்ச்'பந்து வீச்சில் பிடிபட்டார். ஆடுகளத்தில் ஓரளவு பவுன்ஸ் காணப்பட்டதால் வேகப்பந்து வீச்சாளர்கள் 'ஷாட்பிட்ச்' யுக்தியை அதிகமாக கையாண்டனர்.
3-வது விக்கெட்டுக்கு ரிஸ்வானுடன், இப்திகார் அகமது கைகோர்த்தார். இவர்கள் ஆடிய விதம் அந்த அணி 160 ரன்களை தாண்டும் போல் தோன்றியது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் அவர்களின் ரன்வேகம் கொஞ்சம் தளர்ந்தது.
அணியின் ஸ்கோர் 87 ஆக (12.1 ஓவர்) உயர்ந்த போது இப்திகார் அகமது (28 ரன்), ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் வெளியேற்றப்பட்டார். இதன் பிறகு பாகிஸ்தானின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஒரு பக்கம் போராடிக் கொண்டிருந்த முகமது ரிஸ்வானையும் (43 ரன், 42 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) பாண்ட்யாவே காலி செய்தார்.
புவனேஷ்வர் 4 விக்கெட்
இதன் பிறகு புவனேஷ்வர்குமார் மேலும் சில 'செக்' வைக்க பாகிஸ்தான் மிரண்டது. ஆனாலும் கடைசி கட்டத்தில் ஷதப் கான் (10 ரன்), ஹாரிஸ் ரவுப் (13 ரன்), ஷனாவாஸ் தஹானி (2 சிக்சருடன் 16 ரன்) ஆகியோர் அளித்த இரட்டை இலக்க பங்களிப்பு அந்த அணி சற்று சவாலான நிலையை அடைய உதவியது.
பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 147 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கடைசி ஓவரில் ரோகித் சர்மா எளிதான ஒரு கேட்ச்சை தவற விட்டார். இல்லாவிட்டால் அந்த அணி 136 ரன்னிலேயே முடங்கி இருக்கும். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப்சிங் 2 விக்கெட்டும், அவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 148 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு பாகிஸ்தான் பவுலர்களும் பலமான நெருக்கடி கொடுத்தனர். நசீம் ஷாவின் முதல் ஓவரிலேயே லோகேஷ் ராகுல் (0) போல்டு ஆனார். 2-வது விக்கெட்டுக்கு நுழைந்த முன்னாள் கேப்டன் விராட் கோலியும் அதே ஓவரில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற பஹர் ஜமான் நழுவ விட்டார்.
கோலி 35 ரன்
கோலியும், கேப்டன் ரோகித் சர்மாவும் ஒரு வித பதற்றத்துடனே விளையாடினர். ரன்னும் மந்தமாகவே நகர்ந்தது. ஸ்கோர் 50 ஆக இருந்த போது ரோகித் சர்மா (12 ரன்) முகமது நவாசின் சுழலில் சிக்கினார். அவரது அடுத்த ஓவரில் கோலியும் (35 ரன், 34 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) நடையை கட்ட டென்ஷன் எகிறியது. சூர்யகுமார் யாதவும் (18 ரன்) அதிக நேரம் நிலைக்கவில்லை.
5-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவும், ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து நம்பிக்கை தந்தனர். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட போது, 19-வது ஓவரில் பாண்ட்யா 3 பவுண்டரி தெறிக்கவிட்டு நெருக்கடியை தணித்தார்.
சிக்சருடன் இந்தியா வெற்றி
கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் வீசினார். இதில் முதல் பந்தில் ஜடேஜா (35 ரன், 29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) போல்டு ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் ரன் இல்லை. 4-வது பந்தை ஹர்திக் பாண்ட்யா அட்டகாசமாக சிக்சருக்கு விரட்டி பரபரப்புக்கு முற்றுப்புளி வைத்தார்.
இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாண்ட்யா 33 ரன்களுடனும் (17 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
முதல் முறையாக....
* இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே கபளீகரம் செய்தனர். சுழற்பந்து வீச்சாளர் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்சில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இதுவே முதல் நிகழ்வாகும்.
* இந்திய வீரர் விராட் கோலிக்கு இது 100-வது ஆட்டமாகும். இதன் மூலம் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் குறைந்தது 100 ஆட்டங்களுக்கு மேல் விளையாடிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் ஏற்கனவே இச்சாதனையை படைத்துள்ளார்.
* புவனேஷ்வர்குமார் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாக இது பதிவானது.
இன்று ஓய்வு நாள்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று போட்டி எதுவும் கிடையாது. ஓய்வு நாளாகும். அடுத்த ஆட்டம் சார்ஜாவில் நாளை (செவ்வாய்கிழமை) நடக்கிறது. இதில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.