< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
2 Sept 2023 6:05 AM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

பல்லகெலே,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.

சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மல்லுக்கட்ட வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதி சுற்றை எட்டும். இதில் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தையும், 2-வது லீக்கில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது.

இந்த நிலையில் தொடரின் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) பலப்பரீட்சையில் இறங்குகின்றன. ஒரு நாள் கிரிக்கெட்டில் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு அதாவது 4 ஆண்டுகள் கழித்து இரு அணிகளும் முதல் முறையாக சந்திப்பதால் எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது.

விராட் கோலி இன்னும் 102 ரன்கள் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆகியோர் களம் காணுவார்கள் என்று தெரிகிறது.

பந்து வீச்சில் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ள ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஆல்-ரவுண்டர் ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இந்திய அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், இமாம் உல்-ஹக், பஹர் ஜமான் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் ஆகியோர் தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியாக திகழ்கிறது.

எனவே இது இந்தியாவின் பேட்டிங்குக்கும், பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கும் இடையிலான யுத்தமாக வர்ணிக்கப்படுகிறது. மொத்தத்தில் நெருக்கடியை யார் நன்றாக எதிர்கொள்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும்.

பல்லகெலேயில் இன்று மழை பெய்வதற்கு 84 சதவீதம் வாய்ப்புள்ளது. வானம் கருமேகம் சூழ்ந்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். இவ்வாறான சீதோஷ்ண நிலையில், ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கக்கூடும்.

இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் (இலங்கைக்கு எதிராக) வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 5-ல் விளையாடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திரஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

பாகிஸ்தான்: பஹர் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஆஹா சல்மான், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்.

மேலும் செய்திகள்