பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா மோதும் ஆட்டங்களை பொதுவான இடத்தில் நடத்த முடிவு...?
|16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதத்தின் முதல் பாதியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
துபாய்,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதத்தின் முதல் பாதியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் 50 ஓவர் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாட முடியாது. எனவே ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா அறிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வராவிட்டால், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்தது.
இந்த பிரச்சினை குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பு நாடுகள் இடையே பலக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. சமீபத்தில் ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்க சென்ற இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பு நாடுகளின் வாரிய நிர்வாகிகள் சந்தித்து நடத்திய ஆலோசனையில் ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்தவும், இந்திய அணி மோதும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய அணிக்குரிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இலங்கை, இங்கிலாந்து ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் நடத்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விரைவில் முடிவு செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.