ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
|ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கி செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தங்களால் இந்த போட்டியை நடத்த இயலாது என்று கூறி விட்டது. இதையடுத்து அங்கு நடைபெற இருந்த 15-வது ஆசிய கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதன்படி இந்த போட்டி அங்குள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கி செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.
இந்த நிலையில் துபாயில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.