ஆசிய கோப்பை கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி
|இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை போட்டி துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கி செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் துபாயில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் முறையே 3 மற்றும் 2 ரன்களில் அவுட்டாகினர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். அதிகபட்சமாக இலங்கை அணியில் பானுகா ராஜபக்சே 38 ரன்களும் சமிகா கருணாரத்னே 31 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 19.4 வது ஓவரில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் ஹசரதுல்லா செசாய் மற்றும் குர்பாஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
இந்த ஜோடியில் குர்பாஸ் 18 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய இப்ராகிம் சர்டான் 15 (13) ரன்களில் ரன் அவுட்டானர். முடிவில் ஹசரதுல்லா செசாய் 37 (28) ரன்களும், நிஜிபுல்லா சர்டான் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஒவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 106 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் ஹசரங்கா 1 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.