< Back
கிரிக்கெட்
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு
கிரிக்கெட்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு

தினத்தந்தி
|
2 Sept 2022 9:21 PM IST

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹாங்காங் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சார்ஜா,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இதில் 'ஏ' பிரிவில் சார்ஜாவில் இன்று நடைபெற்று வரும் 6-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, நிஜாகத் கான் தலைமையிலான ஹாங்காங்கை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் சார்பில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பாபர் அசாம் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக முகமது ரிஸ்வானுடன், பக்தர் சமான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணி ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய முகமது ரிஸ்வான் 42 பந்துகளில் தனது அரைசத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய பக்தர் சமான் 38 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்திருந்தநிலையில், 53 (41) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய குஷ்தில் ஷா இறுதி ஒவரில் 4 சிக்ஸர் விளாசி ஹாங்காங் அணியை மிரட்டினார்.

இறுதியில் முகமது ரிஸ்வான் 78 (57) ரன்களும், குஷ்தில் ஷா 35 (15) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. ஹாங்காங் அணியின் சார்பில் அதிகபட்சமாக இஷான் கான் 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹாங்காங் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஹாங்காங் அணி தற்போது களமிறங்க உள்ளது.

மேலும் செய்திகள்