< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்காளதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Image Courtesy : @BCBtigers twitter

கிரிக்கெட்

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்காளதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தினத்தந்தி
|
3 Sept 2023 11:47 PM IST

ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது.

லாகூர்,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

லாகூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. அந்த அணியின் மெஹிதி ஹசன், நஜ்முல் ஹொசைன் இருவரும் இணைந்து பவுண்டரிகள், சிக்சர்களை பறக்க விட்டனர். தொடர்ந்து அதிரடி காட்டிய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

இதனால் வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது. மெஹிதி ஹசன் 112 ரன்களும், நஜ்முல் ஹொசைன் 104 ரன்களும் எடுத்தனர். இதனை தொடர்ந்து 335 ரன்கள் இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது.

அந்த அணியின் இப்ராகிம் சத்ரான் மற்றும் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷகிடி இருவரும் நிலைத்து நின்று ஆடி அரைசதத்தை கடந்தனர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால் அணியின் ரன்வேகம் குறைந்தது. ரஹ்மத் ஷா 33 ரன்களில் போல்ட் ஆனார்.

இப்ராகிம் சத்ரான் 75 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். ரஷித் கான் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வங்காளதேச அணி 89 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்