ஆசிய கோப்பை: அக்சர் படேல் காயம்...இந்திய அணியுடன் இணையும் தமிழக ஆல்ரவுண்டர் - வெளியான தகவல்...!
|ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன.
கொழும்பு,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் (50 ஓவர்) விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேசம் அணி 50 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 259 ரன்களே எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அக்சர் படேல் இடம் பெற மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.