< Back
கிரிக்கெட்
இந்த வீரரின் டெக்னிக்கில் எந்த தவறுமில்லை...அவருக்கு சிறிது ஓய்வு தேவை - இளம் வீரருக்கு ஆதரவு தெரிவித்த ஹர்பஜன் சிங்
கிரிக்கெட்

இந்த வீரரின் டெக்னிக்கில் எந்த தவறுமில்லை...அவருக்கு சிறிது ஓய்வு தேவை - இளம் வீரருக்கு ஆதரவு தெரிவித்த ஹர்பஜன் சிங்

தினத்தந்தி
|
4 Sept 2023 1:16 PM IST

நல்ல பார்மில் இருக்கும் அவர் ஐபிஎல் போலவே கம்பேக் கொடுத்து ரன்கள் அடிப்பதை விரைவில் பார்க்க முடியும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கில் 10 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் அதன் பின்னர் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடர், தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார்.

இந்நிலையில் நல்ல பார்மில் இருக்கும் சுப்மன் கில் டெக்னிக்கில் எந்த தவறுமில்லை சமீப காலங்களில் அதிகப்படியான போட்டிகளில் விளையாடிய சோர்வாலையே தடுமாறுவதாக கில்லுக்கு ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது,

அனேகமாக இது அதிகப்படியான கிரிக்கெட்டால் வந்துள்ளது என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் சமீப காலங்களில் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் விளையாடி வருகிறார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் மிகவும் அழுத்தமான ஐபிஎல் தொடருக்குப்பின் ஒவ்வொரு வீரருக்குமே ஓய்வு அவசியமாகும்.

அத்துடன் ஒவ்வொரு 2 - 3 நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளதால் சிறிய ஓய்வு தேவையாகும். இருப்பினும் நல்ல பார்மில் இருக்கும் அவர் ஐபிஎல் போலவே கம்பேக் கொடுத்து ரன்கள் அடிப்பதை விரைவில் பார்க்க முடியும்.

ஏனெனில் அவருடைய டெக்னிக்கில் எந்த தவறுமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனேகமாக இது தன்னம்பிக்கையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதால் வந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்