ஆசிய கோப்பை: இந்திய அணி செய்ததை ஏன் நீங்கள் செய்யவில்லை..? - பாக். அணியை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்...!
|ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் நாளை இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன.
கராச்சி,
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் இந்தியா, இலங்கையிடம் தோல்வி கண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இத்தொடரின் முக்கியமான ஆட்டங்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் சுமாராக செயல்பட்ட துணை கேப்டன் ஷதாப் கானை நீக்கி விட்டு பெஞ்சில் வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்று பாகிஸ்தான் அணி நிர்வாகத்தை ஷாஹித் அப்ரிடி விமர்சித்துள்ளார்.இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் கூறியதாவது,
இது பழைய கதையாக இருக்கிறது. இதே ஆசிய கோப்பையில் விளையாடும் இந்தியா கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆட்டத்திலும் மாற்றங்களை செய்வதை நான் பார்த்தேன்.
அதாவது அவர்கள் சீனியர்களுக்கு ஓய்வு கொடுத்து, ஜீனியர்களை விளையாட வைத்தனர். இது போன்ற முடிவுகள் மிக முக்கியமாகும். ஏனெனில் பெஞ்சில் இருப்பவர்களும் விளையாடும் 11 பேர் அணியில் இருப்பவர்களுக்கு நிகரானவர்களாக இருக்க வேண்டும்.
அதனால் நீங்கள் உங்களுடைய முதன்மை வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை ஷதாப் கான் ஓய்வெடுத்தால் ஒசாமா மிர் விளையாடலாம். பாகிஸ்தானுக்காக அவர் சமீப காலங்களில் விளையாட முழுமையாக தயாராகியுள்ளார்.
எனவே ஏதேனும் சில வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை எனில் அவர்களுக்கு நீங்கள் ஓய்வு கொடுக்கலாம். அதற்காக அவர்களை 15 பேர் அணியில் நீக்க சொல்லவில்லை ஓய்வு கொடுங்கள் என்று சொல்கிறேன். அவர்களிடம் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பேச வேண்டும். அதை செய்யாத பாகிஸ்தான் அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.