< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை 2023 தொடக்க விழா: பிரபல பாகிஸ்தான் மற்றும் நேபாள பாடகிகள் பங்கேற்பு...!!

image courtesy; twitter

கிரிக்கெட்

ஆசிய கோப்பை 2023 தொடக்க விழா: பிரபல பாகிஸ்தான் மற்றும் நேபாள பாடகிகள் பங்கேற்பு...!!

தினத்தந்தி
|
30 Aug 2023 11:55 AM IST

ஆசிய கோப்பை தொடக்க விழாவில் பாகிஸ்தானிய பாடகி ஐமா பெய்க் மற்றும் நேபாளத்தின் திரிஷாலா குருங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

கராச்சி,

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மற்றொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

இந்த ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மட்டுமே நடத்த இருந்தது. ஆனால் இந்திய அணி அந்நாட்டுக்குச் செல்ல மறுத்ததால், பாதிக்கு மேற்பட்ட போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன. இருப்பினும், பாகிஸ்தானில் நடக்க உள்ள தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடக்க விழா மதியம் 2:00 மணிக்கு (பாகிஸ்தான் நேரம்) தொடங்கும் என்று அறிவித்துள்ளது. தொடக்க விழாவில் பாகிஸ்தானிய பாடகி ஐமா பெய்க் மற்றும் நேபாள பாடகி திரிஷாலா குருங் உட்பட பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர். இவர்களின் நிகழ்ச்சிகளுக்கு பின் வாணவேடிக்கைகளுடன் பாகிஸ்தான் - நேபாளம் இடையேயான முதல் போட்டி ஆரம்பமாக உள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஐமா பெய்க் இன்ஸ்டாகிராமில் 6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட பாகிஸ்தானிய பிரபல பாடகி ஆவார். திரிஷாலா குருங் நேபாளத்தில் சில ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அவரை பின்தொடர்கின்றனர்.

மேலும் செய்திகள்