< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை; இது ஒரு கடினமான போட்டி...இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து...!

Image Courtesy: ANI

கிரிக்கெட்

ஆசிய கோப்பை; "இது ஒரு கடினமான போட்டி"...இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து...!

தினத்தந்தி
|
2 Sept 2023 7:29 AM IST

இந்த தொடரில் முக்கிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

புதுடெல்லி,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மல்லுக்கட்ட வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதி சுற்றை எட்டும். இதில் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தையும், 2-வது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது.

இந்நிலையில், இந்த தொடரில் முக்கிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன. 4 வருடங்ளுக்கு பின்னர் இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது,

நான் ஒரு சிறந்த ரசிகன், அந்த போட்டியை பார்க்க விரும்புகிறேன். அதிர்ஷ்டவசமாக அல்லது துரதிர்ஷ்டவசமாக, போட்டி தொடங்கும் அந்த நேரத்தில் நான் ஒரு ஷோவில் இருக்கப் போகிறேன்...பாகிஸ்தான் தரப்பு நல்ல பக்கமாக இருப்பதால் இது கடினமான போட்டி.

அவர்கள் முழு பலத்துடன் உள்ளனர். எங்கள் முக்கிய வீரர்களில் சிலருக்கு இன்னும் காயம் முழுமையாக குணமாகவில்லை. இருந்தாலும் இந்த தொடரை வெற்றிக்கணக்குடன் தொடங்குவோம் என நம்புகிறேன். இது ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கும். பாகிஸ்தானை வீழ்த்தி முன்னிலை பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்