< Back
கிரிக்கெட்
ஜாம்பவான்கள் பி.எஸ்.சந்திரசேகர், அனில் கும்ப்ளேவை தாண்டி வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்

image courtesy; twitter/@BCCI

கிரிக்கெட்

ஜாம்பவான்கள் பி.எஸ்.சந்திரசேகர், அனில் கும்ப்ளேவை தாண்டி வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்

தினத்தந்தி
|
5 Feb 2024 11:18 AM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின்போது அஸ்வின் இந்த சாதனையை படைத்துள்ளார்.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில் சதத்தின் உதவியுடன் 255 ரன்கள் அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்தியா.

இதனையடுத்து 399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 3-வது நாளில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் அடித்திருந்தது. ஜாக் கிராலி 29 ரன்களுடனும், ரெஹான் அகமது 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து வீரர்களில் ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினார்.

இதில் ஒல்லி போப் விக்கெட்டை வீழ்த்தியபோது இந்திய ஜாம்பவான்கள் பி.எஸ்.சந்திரசேகர், அனில் கும்ப்ளேவை தாண்டி அஸ்வின் வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார். அதாவது இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான்கள் பி.எஸ்.சந்திரசேகர், அனில் கும்ப்ளேவை தாண்டி முதலிடத்தை பிடித்து அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்;-

1. அஸ்வின் - 96 விக்கெட்டுகள்

2.பி.எஸ்.சந்திரசேகர் - 95 விக்கெட்டுகள்

3.அனில் கும்ப்ளே - 92 விக்கெட்டுகள்

4. பி.எஸ்.பேடி/ கபில் தேவ்- 85 விக்கெட்டுகள்

5. இஷாந்த் சர்மா - 67 விக்கெட்டுகள்

மேலும் செய்திகள்