சி.எஸ்.கே அணியில் ஜடேஜா தக்கவைக்கப்பட்டதற்கு இது தான் காரணம்- மனம் திறந்து பேசிய அஸ்வின்
|சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பாரா அல்லது வேறு அணியில் ஆடுவாரா உள்ளிட்ட பல கேள்விகள் அணியை சூழ்ந்திருந்தது.
சென்னை,
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளநிலையில் அடுத்ததாக 2023-ஆம் ஆண்டிற்கான 16-வது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதத்தில் துவங்கி நடைபெற உள்ளது.
இதற்காக டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெற இருப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் மற்றும் வெளியேற்றும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதி வெளியிட்டது.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டர் ஜடேஜா தக்கவைக்கப்பட்டார். நீண்ட நாட்களாக சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பாரா அல்லது வேறு அணியில் ஆடுவாரா உள்ளிட்ட பல கேள்விகள் சென்னை அணியை சூழ்ந்திருந்தது. அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிஎஸ்கே அணியில் ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.
இந்நிலையில் சமீப காலமாகவே கிரிக்கெட் குறித்த கருத்துக்களை தனது யூடியூப் சேனல் மூலமாக பேசி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜாவின் இடம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ரவீந்திர ஜடேஜா இந்த ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக விளையாட மாட்டார் என்றெல்லாம் பல பேச்சுகள் இருந்தன. ஆனால் இந்த முறையும் ஜடேஜா சென்னை அணிக்காக தான் விளையாடுகிறார். ஜடேஜாவை டிரேடிங் மூலம் மாற்ற நினைத்தார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதெல்லாம் எதுவுமே உண்மை கிடையாது.
ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றினால் சென்னை அணிக்கு 16 கோடி மிச்சமாகும். ஆனால் அவரது இடத்திற்கு வேறொரு இந்திய வீரரை நிரப்புவது என்பது முடியாத காரியம். ஜடேஜா போன்று எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட கூடிய ஒரு வீரருக்கு பதிலாக மாற்று இந்திய வீரரை எப்படி தேர்வு செய்ய முடியும்.
அதேபோன்று ஜடேஜா வேறொரு அணிக்கு மாறினால் அந்த அணி எவ்வளவு பலமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். இதனால்தான் சென்னை அணி நிர்வாகமும் அவரின் மதிப்பை உணர்ந்து தக்க வைத்துள்ளது" என்றார்.