< Back
கிரிக்கெட்
நாதன் லயனின் கருத்திற்கு அஸ்வின் பதிலடி கொடுக்க வேண்டும் - பாக்.முன்னாள் வீரர்
கிரிக்கெட்

நாதன் லயனின் கருத்திற்கு அஸ்வின் பதிலடி கொடுக்க வேண்டும் - பாக்.முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
19 Sept 2024 4:33 PM IST

இம்முறை இந்தியாவை 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்வோம் என்று நாதன் லயன் கூறியிருந்தார்.

கராச்சி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக கடந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை இம்முறை 4 -1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் கணிப்புகளை வெளியிட்டனர். அதே போல 10 வருடங்கள் கழித்து இந்தியாவை வீழ்த்த இப்போதே தயாராகி வருவதாக கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறினார்.

அந்த வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இம்முறை 5-0 என்ற கணக்கில் வென்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்வோம் என்று சவால் விடுத்தார்.

இந்நிலையில் தங்களைப் போன்ற முன்னாள் வீரர்கள் கணிப்புகளை வெளியிடுவதில் நியாயம் இருக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார். ஆனால் தற்போது விளையாடி வரும் நாதன் லயன் தெரிவித்துள்ள இந்த கணிப்பு முட்டாள்தனமானது என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நாதன் லயனின் முட்டாள்தனமான கருத்துக்கு ஆஸ்திரேலியா 6 - 0 (5 போட்டிகள்) என்ற கணக்கில் இந்தியாவை வெல்லும் என்ற ஒரு விஷயத்தை மட்டுமே நான் சொல்வேன். ஆனால் அது வார்த்தைகளில் மட்டுமே இருக்கும். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் கடந்த 2 தொடர்களில் இந்தியா டாமினேட் செய்துள்ளது. எனவே இது போன்ற கருத்துகள் தற்போதைய கிரிக்கெட்டர்களுக்கு பொருந்தாது. ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்கள் வேண்டுமானால் இது போன்ற கருத்துகளை வெளியிடலாம். இந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவை 5 - 0 என்ற கணக்கில் இந்தியா தோற்கடிக்கும் என்று அஸ்வின் அவருக்கு பதிலடி கொடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார்.

மேலும் செய்திகள்