< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள்... நாதன் லயனை வாழ்த்திய அஸ்வின்..!
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள்... நாதன் லயனை வாழ்த்திய அஸ்வின்..!

தினத்தந்தி
|
18 Dec 2023 12:55 PM IST

இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள நாதன் லயன் மொத்தம் 501 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

பெர்த்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தினார்.

அதோடு ஆஸ்திரேலியா அணி சார்பாக ஷேன் வார்னே மற்றும் கிளென் மெக்ராத் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது ஆஸ்திரேலிய வீரராக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள நாதன் லயன் மொத்தம் 501 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்கு அடுத்து ஒரு ஆப் ஸ்பின்னராக 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் செய்திருக்கிறார். இந்நிலையில் அவரது இந்த சாதனைக்கு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்,'டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டாவது பந்து வீச்சாளராகவும், இரண்டாவது ஆப் ஸ்பின்னராகவும் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளீர்கள். வாழ்த்துகள் நாதன் லயன்' என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்